இந்தியா - நியூசிலாந்து வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் ஆயத்த ஆடை ஏற்றுமதி உயரும்!
- Repoter 11
- 30 Apr, 2026
மாண்புமிகு, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்கள் மற்றும் மற்றும் நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் திரு.டாட் மெக்க்லே ஆகியோரால், கையெழுத்திடப்பட்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்றுள்ளது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறைக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும், முக்கிய மைல் கல்லாகும் என்று AEPC தெரிவித்துள்ளது. இந்தியா,–நியூசிலாந்து ஒப்பந்தம் தொடர்பாக, AEPC தலைவர் டாக்டர்.ஆ.சக்திவேல் அவர்கள் கூறியதாவது, இந்த தொலைநோக்கு பார்வையுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம், இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய ஊக்கமாகும். நியூசிலாந்து சந்தையில் 100 சதவீதம் வரி இல்லா அணுகல் கிடைப்பதால், இந்திய தயாரிப்புகள் உடனடி போட்டித் திறனை அதிகரிக்கும். குறிப்பாக, ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி போன்ற பெரும் தொழிலாளர்கள் சார்ந்த துறைகளில், இது அதிக ஏற்றுமதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் MSMEகளின் வளர்ச்சிக்கு உதவும். டாக்டர்.சக்திவேல் மேலும் குறிப்பிட்டதாவது, நியூசிலாந்து வருடத்திற்கு 1.2 பில்லியன்
USD மதிப்பிலான ரெடிமேட் ஆடைகளை இறக்குமதி செய்கிறது. இதில், இந்தியாவின் பங்கு தற்போது சுமார் 4.4 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த FTA மூலம் காட்டன் T-ஷர்ட்கள், சட்டைகள், நிட்வேர் மற்றும் பிற ஆடைகள் போன்ற முக்கிய பிரிவுகளில் இந்தியாவின் பங்கினை, குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தும் வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நியூசிலாந்துக்கான இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி மூன்று மடங்கு உயரக்கூடும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேம்பட்ட, சந்தை அணுகல் மற்றும் போட்டித் திறன் இதற்கு காரணமாக இருக்கும். மேலும், இந்த ஒப்பந்தம், பருத்தி அடிப்படையிலான ஆடைகளில், இந்தியாவின் வலிமையை மேம்படுத்துவதுடன், நியூசிலாந்தின் இறக்குமதி தேவைகளுக்கு ஏற்ப, செயற்கையிழை பிரிவுகளிலும், விரிவடையும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார். ஆயத்த ஆடை ஏற்றுமதி துறை சார்ந்த விரிவான தாக்கத்தை விளக்கும்போது, இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் முக்கிய துறைகளில் ஒன்றான, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை, இந்த ஒப்பந்தத்தால் மிகுந்த பயன் பெறும். இது இந்தியாவை, நம்பகமான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக வலுப்படுத்தும் மற்றும் நிலையான ஏற்றுமதி வளர்ச்சியை முன்னெடுக்கும் என்றும், டாக்டர்.சக்திவேல் தெரிவித்தார். AEPC, இந்த ஒப்பந்தத்தின் முழு நன்மைகளையும் ஏற்றுமதியாளர்கள் பெற உதவும் வகையில் சந்தை விரிவாக்கம், திறன் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளது. இந்த ஒப்பந்தம், நியூசிலாந்திற்கான இந்திய ஆடை ஏற்றுமதியில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்றும் இந்த வாய்ப்புகள் மூலம் நடைமுறை பலன்களை பெறுவதற்காக, ஆயத்த ஆடை ஏற்றுமதித் துறையுடன், AEPC நெருக்கமாக பணியாற்றும் என, டாக்டர். சக்திவேல் மேலும் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

